அண்மைய பதிவுகள்
மேலதிக பதிவுகள்

ஆதியில் கொண்ட அன்பு

நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக. - வெளிப்படுத்தின விசேஷம் - 2.5.

புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் ஆரம்பநாட்களில் ஒருவரையொருவர் எவ்வாறு பிரியப்படுத்தலாம் என்று கவனமாக இருப்பார்கள். எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவர்.  துணையின் செயல்களை பாராட்டுவதிலும்,  சுவையான உணவளிப்பதிலும், எதிர்பாராத அன்பளிப்புகளைக் கொடுப்பதிலும் தீவிரம் காட்டுவர்கள். சிரத்தை எடுப்பார்கள்.  ஆனால் சில ஆண்டுகள் கழித்து பார்த்தால் பெரும்பாலான தம்பதியினரிடையே இந்த உணர்வு தன்மைகள் மறைந்து போய்விடுகிறது.  குடும்பமாக இணைந்து வாழ்ந்தாலும்,  சரியாக அவரவருடைய பொறுப்புகளை நிறைவேற்றினாலும் ஒருவரைக் குறித்து மற்றவருக்கு அலட்சிய மனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது.

அதேப்போல ஒரு அலுவலகத்தில் வேலையில் சேரும்போது முதல் நாளில் சரியான நேரத்திறகு சென்று விடுகிறோம். கடினமாக உழைக்கிறோம். மேலதிகாரியிடம் மிகவும்  மரியாதையாக நடந்து கொள்கிறோம். அவருக்கு பிடித்ததையும், பிடிக்காததையும் மிகவும் வரைவாகத் தெரிந்து கொள்கிறோம்.  ஆனால் 3 அல்லது 5 ஆண்டுகள் கழித்து நிலமை என்ன ஆகிறது?  காலதாமதம, பொறுப்பின்மை போன்ற அலட்சியம் நம்மில் அநேகருக்கு ஏற்பட்டு விடுகிறதல்லவா?

இப்போது நாம் நம்முடைய பாய்ண்டுக்கு வருவோம்.  ஆண்டவரோடுள்ள நமது உறவு எப்படிக் காணப்படுகிறது? இரட்சிக்கப்பட்ட அந்த நாளை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அபிசேஷகம் பெற்ற அந்த நிமிடங்களை சற்று எண்ணிப் பாருங்கள் அன்று மற்ற எல்லாவற்றையும் விட அவரை பிரியப்படுத்தவே ஆசைப்பட்டோம். வாழ்வின் சிறு சிறு காரியங்களுக்கு கூட அவருடைய ஆலோசனையை நாடினோம்.  இதயத்தின் ஆழத்திலுள்ள எண்ணங்களையும் விருப்பங்களையும் கூட அவரோடு பகிர்ந்து கொண்டோம்.  இன்று தேவனோடுள்ள உங்களுடைய உறவு எப்படியிருக்கிறது. இன்னும் அனலாகியுள்ளதா?  அல்லது அனலுமின்றி, குளிருமின்றி வெதுவெதுப்பாய்க் காணப்படுகிறதா?


வேதத்தில் இதே நிலமையிலுள்ள எபேசு என்ற சபைக்கு தேவன் கூறும் ஆலோசனை என்ன தெரியுமா? மேலே (துவக்கத்தில்) குறிப்பிட்ட வசனத்தை வாசித்துப் பாருங்கள்.  ஆம் முதலவதாக 'நினையுங்கள்' ஆதியில் தேவன் மேல் கொண்ட அன்பை நினையுங்கள்.  தற்போதுள்ள நிலையை அதோடு ஒப்பிட்டு பாருங்கள்.  அடுத்ததாக 'மனந்திரும்புங்கள்'. முதலாவது உங்களை கர்த்தருடைய பாதத்தில் தாழ்த்தி அவரிடம் உங்கள் உள்ளத்தை ஊற்றி ஜெபியுங்கள். எந்த காரியம் என்னை ஆவரை விட்டு விலக செய்தது என்று சிந்தித்து மனம் மாறுங்கள். ஆதியில் கொண்ட அன்பை பெற தேவன் நிச்சயம் உதவுவார்.

இயேசுக் கிறிஸ்து இப்படி நடந்து கொண்டாரா????

இயேசுக் கிறிஸ்துவில் ஒன்று சேர்க்கப்பட்ட நாம் அவர் பிள்ளைகளாய் இருக்கிறோம். அவருடைய நாமத்தினால் நாம் எதைக்கேட்டாலும் அவர் எமக்கு தருகிறவராய் இருக்கிறார். எனினும் விசுவாசத்தின் ஆழத்தையும், நாம் அவரில் வைத்திருக்கும் அன்பையும் தேவன் ஒருவேளை அறிய முற்படும் போது என்ன நிகழும்? பரிசுத்த வேதாகமத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பார்ப்போம். 

இயேசு ஒரு நாள்  தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: "ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்" என்று சொல்லிக் கூப்பிட்டாள். இப்பொழுது இயேசுவின் வழமையின் படி அவர் அவளது மகளை சுகப்படுத்தியிருக்க வேண்டும். எனினும் இயேசு அந்த இடத்தில் அவளுக்கு எந்த வார்த்தையும் சொல்லவில்லை. இது இயேசுவை நம்பி வந்த அவளுக்கு ஒரு ஏமாற்றமாகவே இருந்திருக்கும். அதோடு மட்டும் இந்த ஏமாற்றம் முடியவில்லை, தொடர்ந்து என்ன நடக்கிறதென்பதை கவனியுங்கள். அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: "இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும்" என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதாவது இயேசு பேசாமலிருந்தும் அவள் அவர்களை விடாமல் தொடர்ந்து செல்கிறாள். இதனால் சீஷர்கள் இயேசுவிடம் அவளை அனுப்பிவிடும் படி கேட்கிறார்கள். அதற்கு இயேசு அளித்த பதில் "காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல". இவ்வாறு இயேசு சொன்னாலும் அவள் அவரை விடவில்லை அவர் பாதத்தில் விழுந்து அவரை பணிந்து கொள்கிறாள். அதற்கு இயேசு சொல்கிறார் "பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல". இந்த வார்த்தையானது அவளுக்கு ஆறுதலை அல்ல, அவமானத்தையே அவளுக்கு கொடுத்திருக்கும். எனினும் அவள் இயேசுவை தவிர தனது மகளுக்கு வேற எவராலும் விடுதலை தரமுடியாது என்பதை அறிந்திருந்தாள். அது அவள் இயேசுவுக்கு அளித்த பதில் மூலம் நமக்கு காட்டுகிறது. "மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே" என்று அவள் சொன்னாள். தன்னை ஒரு நாய் என்றே அவள் ஏற்றுக்கொள்கிறாள். இதற்குப் பின்பும் இயேசு அவளை சோதிக்க விரும்பவில்லை. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: "ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது" என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். (மத்தேயு 15:21-28)

இதே போல தான் யோபுவுக்கும் சோதனை உண்டானது எனினும் அவன் ஒரு போதும் கடவுளை தூசிக்கவில்லை. நாம் சோதிக்கப்படும் போது பின்வாங்கிப்போகிறோம், அல்லது ஒரு அவமானத்தை இயேசுவின் நாமத்தில் ஏற்க மறுக்கிறோம், அல்லது நாம் அவரிடம் வேண்டிக்கொள்வது கிடைக்கவில்லையே என்று பொறுமையிழக்கிறோம். இந்த சம்பவத்தில் அவள் கோபப்பட்டிருந்தால் அவள் அவளது மகளுக்கு சுகத்தை பெற்றிருக்க முடியாது, விசுவாசம் பெரிது என்கின்ற நற்சான்றுதலையும் இயேசுவிடம் இருந்து பெற்றிருக்க முடியாது. ஆகவே நாமும் பொறுமையாய் இருப்போம், எதை எவ்வேளையில் நமக்கு செய்ய வேண்டும் என்று கர்த்தருக்கு தெரியும் (மத்தேயு 6:8). அவசரப்பட்டு வீணராகிவிடாதபடி பொறுமையுடன் இருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.  

இது சகோ.ஸ்டான்லி(இந்திய தேவ மனுஷன்) அவர்களின் பிரசங்கத்தின் ஒரு பகுதி..

இலங்கையின் சுதந்திர தினம்....

ஆசியாவின் அழகிய தேசமான இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். 1948 ஆம் ஆண்டு, மாசி மாதம், 4 ஆம் திகதி இலங்கை பிரித்தானியாவின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது.
இலங்கை தேசம் பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இந்த தேசத்தில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் சந்தோசமாகவும், சமாதானமாகவும், ஆசீர்வாதமாகவும் வாழ கர்த்தர் தாமே கிருபை செய்வாராக. மேலும் சில ஜெப குறிப்புகள்.

 • இலங்கையின் ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்காக.
 • இலங்கை பொருளாதாரத்தில் வளர.
 • சகல துறைகளிலும் பாரிய வளர்ச்சி ஏற்பட.
 • வீடுகள், காணிகள் இல்லாதோர் அவைகளை பெற்றுக் கொள்ள.
 • கஷ்டங்களோடு, கடன்களோடு, வேதனைகளோடு இருப்போர் அதிலிருந்து விடுபட.
 • பில்லி சூனியம், விக்கிரககட்டு, பாவக்கட்டு என்பவற்றிலிருந்து விடுபட.
 • இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை பெற.
 • இனங்களுக்கிடையே ஒற்றுமை உண்டாக. 
 • சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் இல்லாதொழிக்கப்பட.
 • அசுத்தமான வியாதிகளிருந்து இலங்கை குணமடைய.
 • கர்த்தருக்கு விரோதமாக எழும்பும் எல்லா காரியங்களும் வாய்க்காமல் போகவும், ஊழியங்கள் ஆசீர்வதிக்கப்படவும்.
 • கர்த்தரின் கரம் எப்போதும் இத்தேசத்தில் இருக்கவும்.
நாம் ஜெபிப்போம்....ஆமேன்.

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். யோவேல் 2:21

இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய். ஏசாயா 60:18

நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும். ஏசாயா 62:4  


பசியும் தாகமும்....

நாம் வெறுமையாய் இருக்கிறோம் என்பதை நம்முடைய மாம்ச சரீரத்தில் உண்டாகிற பசியும் தாகமும் நமக்கு வெளிப்படுத்துகிறது. இந்த மாம்ச சரீரத்தில் ஏற்படுகிற பசியையும் தாகத்தையும் தீர்க்கும் பொருட்டு நாம் உணவையும் தண்ணீரையும் நாடுகிறோம்.

கிறிஸ்துவின் நீதி மட்டுமே திருப்தியை தரமுடியும் என்பதே ஒவ்வொரு கிறிஸ்தவனின் உள்ளான ஆவலாய் இருக்கிறது. ஆனால் நாம் சுய சித்தத்தை நாடுகிறவர்களாய் இருப்போமானால் நாம் நீதியினால் நிறைக்கப்பட முடியாது. ஒரு மனிதர், தன்னுடைய முழு இருதயத்தோடும் தேவனைத் தேடுவாரானால் அவரைக் கண்டுபிடிப்பார் என்று தேவன் வலியுறுத்துவதை நாம் சத்திய வேதம் மூலம் காணலாம் (எரேமியா 29 :13 ). நாம் நீதியை சுதந்தரித்துக் கொள்ள விரும்பும் போது பாவத்தை குறித்து மனஸ்தாபப்படுவோம். அப்போது தேவன் நம்மிடமிருந்து பாவத்தை அகற்றுவார். நம்முடைய சுயதன்மை அழிக்கப்பட்டு அங்கெ ஆவியின் கனிகளான அன்பு, சந்தோசம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவை (கலாத்தியர் 5 :22 -23 ) இடம்பெறும். பரிசுத்த ஆவி நம்மை கிறிஸ்துவைப் போலாக்கும். 

நீதியை, எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது, இது எளிதாக கிடைக்கக் கூடியதும் அல்ல. பரிசுத்தமான தேவன் தன நீதியை மக்களுக்கு கண்மூடித்தனமாகக் கொடுப்பதில்லை. அவருடைய நீதி இல்லாமல் வாழ முடியாது என்று நினைக்கிற மக்களுக்கே அவர் அதை கொடுக்கிறார். தனிப்பட்ட நீதியைக் குறித்த நம்முடைய விருப்பம், வல்லமையுடையதாகவும், அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறதாகவும், நாம் செய்கிற அனைத்தையும் ஆளுகை செய்கிறதாகவும் இருக்க வேண்டும். நீதியை நாடுகிறோம் என்றாலும், மக்களுடைய கருத்துகளுக்கு மேலாக தேவனுடைய கருத்துக்களை நாம் பொக்கிஷங்களாக எண்ணுகிறோம் என்பது பொருளாகும். 

நீதி என்பது வெறும் பாவம் அல்லாத தன்மையல்ல. இது, தேவன் தன்னுடைய பரிசுத்தத்தை நம்மில் நிறைக்கச் செய்ய அனுமதிப்பதேயாகும் (ரோமர் 6 :11 ). இது கிறிஸ்துவை போல இருப்பதாகும். தேவனுடைய நீதியை முதலாவது நாடிய ஒருவரான இயேசுவே நம்முடைய முன்மாதிரியானவர். இதற்கு பிறகு தான், பிதா அவரை மகிமைப்படுத்தினார். நாம் தேவனுடைய இராஜ்ஜியத்தை தேடுகிறவர்களாக மட்டுமல்லாமல், அவருடைய நீதியைத் தேடுகிறவர்களாகவும் இருக்க வேண்டும் (மத்தேயு 6 :33 ). நாம் நீதிக்காக பசிதாகமுள்ளவர்களாக இருப்போமானால் திருப்தியடைவோம். 


  "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்." (மத்தேயு 5:6)

இன்னும் நீ தாமதமா???

வருகிறவர் இன்னும் கொஞ்சக் காலத்தில் வருவார், தாமதம் பண்ணார் (எபிரேயர் 10 :37 ) என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறபடியே நம் தேவனுடைய வருகையானது மிக மிக சமீபமாய் இருக்கிறது என்பதைக் குறித்து நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இப்போது நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? தற்போது வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப உலகினில் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரத்தினை நாம் நம்மை படைத்த தேவனுக்கு கொடுக்கிறோம் என்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.

ரோமர் 11 :29 இல் தேவனுடைய கிருபை வரங்களும் உங்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாம் எத்தனை பேர் இவ் அழைப்பிற்கு உண்மையாய் இருக்கின்றோம்? இன்று நாம் பார்க்கும் போது பலர் தங்களது வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பணம் சம்பாதிப்பதில் மாத்திரமே குறியாய் இருக்கின்றார்கள். ஆலயத்திற்கு போகவோ, ஊழியங்களில் பங்கு கொள்ளவோ அல்லது தேவனை துதித்து பாடி அவரை கிட்டிச் சேரவோ நம்மில் பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. ஓடி ஓடி உழைத்து சொத்துக்களை சேர்ப்பதால் என்ன பயன்? பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை, என்று வேதம் சொல்கிறது. 

பெண்களைப் பார்க்கும் போது வீட்டு வேலைகளிலும், குடும்பத்தை பராமரிப்பதிலும் தங்களது காலத்தை செலவழிக்கிறார்கள். ஆண்டவரை தேட அவர்களுக்கு நேரம் இல்லை. தேவனுடைய சத்தம் அவர்களுக்கு கேட்பதில்லை. (மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.)இன்னும் பலர் உலக சிற்றின்பங்களுக்குள் அடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு ஆண்டவரின் வருகையை குறித்து எவ்வித கவலையும் இல்லை, பயமும் இல்லை (கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்). இன்று நாம் நிதானித்து பார்ப்போம், மனம் திரும்புவோம். நம் தேவன் நம்மை மன்னிக்க ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார். அவர் இரக்கமுள்ள தேவன், நாம் மரித்த பின்பு மனந்திரும்பவும் முடியாது, தேவனுடைய அன்பை மற்றவர்களுக்கு சொல்லவும் முடியாது. ஆகையால் 1 யோவான் 2 :28 இன் படி "இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்."

சாத்தானுக்கு இடம் கொடாதீர்கள்...

விசுவாசத்தில் பெரிய தலைவர்கள் சிலர், தேவனால் மெய்யாகவே பாவிக்கப்பட்டு, அவருடைய வல்லமையுள்ள நாமத்தில் பலத்த காரியங்களைச் செய்த பின்னரும் எப்படி விபச்சாரத்தில் விழுந்திருப்பார்களென நான் வியந்ததுண்டு. இந்தப் பெரிய தலைவர்கள் குறிப்பாக இந்தப் பாவத்தில் விழுந்தது, சடுதியாக நிகழ்ந்த காரியம் போல் தெரிந்தாலும், அது அப்படியல்ல. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சில இடங்களில் விட்டுக்கொடுப்புக்கு அனுமதித்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். நான் இதை அனுபவத்திலிருந்து பேசுகிறேன்.

ஏனெனில் இப்படியான காரியங்கள் எவ்வளவு அபாயகரமானவை என்பதை என்னுடைய வாழ்க்கையில் கண்டுள்ளேன். அது ஒரு சிறிய காரியம் என்று எண்ணிக்கொண்டு பவுல் அறிவுறுத்தியுள்ள பிரகாரம் நாம் விலகியோடுவதில்லை(2 தீமோ. 2 :22). ஆனால், சாத்தான் இந்தச் சின்ன காரியங்களில் மிகவும் உவகையடைந்து, மிகவும் மோசமானதொன்று நடக்கிறதை நாம் உணராதபடிக்கு அதனை வளர விடுகிறான். இது இப்படி நடக்கக்கூடும் என்று மற்றவர்கள் பிரமிக்கத்தக்க விதமாக குறிப்பிட்ட பாரதூரமான பாவம் நம் வாழ்வில் நடைபெறும் நிலைக்கு மிக விரைவில் நாமே வந்து விடுகிறோம். 

பிசாசுக்கு இடங்கொடாமல் இருங்கள் (எபே. 4 :27) என்று பவுல் எச்சரிக்கை செய்கிறார். நாம் இடம் கொடுத்தால், அவன் எமது வாழ்க்கைக்குள் நுழைந்து, சிறிய காரியங்களை பயன்படுத்தி, அசுத்தத்தை வளரவிட்டு எம்மை அளித்துப்போடுவான். இச் சிறு காரியங்கள், நாம் ஆலோசனை சொல்பவருடனோ அல்லது உதவி செய்பவருடனோ உள்ள உறவு, அதிக நெருக்கம் அடைவதாக இருக்கலாம். இணையதளத்தின் எல்லையிலுள்ள தள பக்கங்களுக்குப் போவதாயுமிருக்கலாம். இது, புத்தகங்களிலோ தொலைக்காட்சியிலோ குறிப்பாக பார்க்கக்கூடாத பகுதிகளை நோக்கி நமது கண்களை செல்ல அனுமதிப்பதாகவும் இருக்கலாம். பலனற்ற சினிமாப் படங்களை பார்ப்பதாகவோ, புத்தகங்களை வாசிப்பதாகவோ இருக்கலாம். இவை சாத்தான் நம்மைப் பொறியில் பிடிக்க ஆரம்பிக்கும் திட்டங்களாக அமையலாம். பவுலின் அறிவுரையோ, இப்படியான காரியங்களுடன் சமரசமாக நடவாமல் (விட்டுக்கொடுப்புக்கு இடங்கொடாமல்) பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோட வேண்டும் என்பதாகும்.
(அஜித் பெர்ணான்டோ)
 
Copyright © 2012-2015. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved